மர செக்கு எண்ணையின் மகத்துவம்

மர செக்கில் எண்ணெய் ஆட்டுவதில் அனுபவம் வாய்ந்த மதுரை, சமயநல்லூர், செந்தில்குமார் பதில் சொல்கிறார்.
''அந்தக் காலத்தில், மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்... போன்றவற்றை ஆட்டினார்கள். காலப்போக்கில் கால்நடைகள் குறைந்து போனதாலும், மர செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழில் நலிவடைந்து விட்டது. இந்த செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. ஆனால், நாங்கள் பழையபடியே மர செக் மூலமாகவே தற்போதும் எண்ணெய் ஆட்டி வருகிறோம். மாட்டுக்குப் பதிலாக, மோட்டார் பொருத்தியிருக்கிறோம் அவ்வளவுதான். இப்படி மர செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும்.

ஆனால், முழுக்க முழுக்க இயந்திரம் (ரோட்டரி) மூலமாக எண்ணெய் ஆட்டும்போது... கைகளில் எண்ணெயைத் தொட்டு பார்க்க முடியாத அளவுக்கு வெப்பத்துடன் இருக்கும். எண்ணெய், இப்படி ஒரேயடியாக வெப்பமாகி விட்டால், அதன் சத்துக்கள் குறைந்துவிடும் என்பதுதான் உண்மை. அதனால்தான், 'ஒரு தடவை பலகாரம் செய்வதற்காக பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் பயன்படுத்தக் கூடாது' என்று சொல்கிறார்கள். சொல்லப்போனால், இத்தகைய எண்ணெயை சாப்பிடுவதன் மூலமாக வேறு பல சிக்கல்களும் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இயந்திரத் தயாரிப்பில் வரும் எண்ணெய் பார்ப்பதற்கு பளீர் என்று இருக்கும். இந்த எண்ணெய் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரைதான் தாங்கும்.

மர செக்கு எண்ணெய், பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாகவே இருக்கும். ஆனால், நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்கு கெட்டுப் போகாமலும் இருக்கும். ஒரு முறை மர செக்கு எண்ணெயை சாப்பிட்டால்... அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது. உங்கள் அப்பா அம்மாவைக் கேட்டுப் பாருங்கள் இந்த உண்மையைச் சொல்வார்கள்!''

தொடர்புக்கு : செல்போன்: 9994270338.

நன்றி : பசுமை விகடன்

மர செக்கு எண்ணெய்யைப் பெற : 9092240289, 9952551198

அறுசுவை சமையல் உலகம்