குடிங்க, குடிங்க குடிச்சிக்கிட்டே இருங்க!

குடியுங்க, குடிக்க மறக்காதீங்க, குடிக்க என்றுமே மறக்காதீங்க. அட, குடிநீர் குடிக்க மறக்க வேண்டாம் என்று தான் சொல்லுகிறேன். இயற்கையாக கிடைக்கும் வளங்களில் ஒன்றான நீரை நாள்தோறும் குடிக்கும் வழக்கத்தை ஏன்? எதற்கு? என்ற கேள்விகளின்றி நாம் தொடங்கியிருக்கலாம். ஆனால், உடலுக்கு மிகவும் தேவையான குடிநீர் பற்றிய தெளிவுகள் பலருக்கும் தெரியாது என்பது தான் உண்மை. உடல் நலத்தில் குடிநீர் ஏற்படுத்தும் செல்வாக்குகள் மிக அதிகம். உடல் திசுக்களும், உறுப்புகளும் கூட நீரால் ஆக்கப்பட்டுள்ளன. உடலிலுள்ள தசைகளில் 75 விழுக்காடு, மூளையில் 90 விழுக்காடு, எலும்பில் 22 விழுக்காடு, இரத்தத்தில் 83 விழுக்காடு நீர் உள்ளது குறிப்பிடத்தககது. தலைமுதல் கால் வரையுள்ள ஒவ்வொரு உயிரணுவுக்கும் நீர் மிகவும் அவசியம். எனவே போதுமான அளவு நீர் குடிக்க வேண்டியது நலமான வாழ்வுக்கு இன்றியமையாததது. உடலுக்கு தேவையான அளவு நீரை சரியாக வழங்கி வந்தால் தான் உடல் உறுப்புகளும் நலமோடு செயல்பட முடியும். எடுத்துக்காட்டாக, மூளையில் 90 விழுக்காடு நீர் உள்ளது. உடலுக்கு தேவைப்படும் போதுமான நீரை நாம் வழங்காவிட்டால் மூளை சரியாக செயல்பட முடியாது. அதனால் தலைவலியும், தீவிர ஒன்றை தலைவலியும் ஏற்படும்.


உடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குடிநீர் சிறந்த தரமுடையாதாக இருக்க வேண்டும். அதற்கான புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை உலக சுகாதார அமைப்பு ஜூலை 11 ஆம் நாள் திங்கட்கிழமை வெளியிட்டது. நீர் பாதுகாப்பு திட்டத்தை வகுத்து, குடிநீர் தரத்தின் மேலாண்மையை வலுப்படுத்த இந்த புதிய வழிமுறைகள் பல்வேறு நாடுகளுக்கு உதவும். நீர் பாதுகாப்பில் நல்ல தரமான வரையறையை உருவாக்குவதன் மூலம் பொது சுகாதாரத்தில் தலைசிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. காலநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம், நகரமயமாகுதல் போன்றவற்றால் குடிநீர் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய புதிய அறைகூவல்களை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த, செலவு குறைந்த குடிநீர் வசதிகளை வழங்க முடியுமெனவும் இது வலியுறுத்தியுள்ளது. தற்போது அதிகரித்து வரும் குடிநீர் மாசுபாடுகளில் கவனம் செலுத்துவது தற்பொதைய புதிய நெறிமுறைகளின் சிறப்பு அம்சமாகும். இதற்கு முன்னதாக, 2004 ஆம் ஆண்டு குடிநீர் தர வரையறையை உலக சுகாதார அமைப்பு திருத்தி வெளியிட்டது.

குடிநீரால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை அடுக்கி கொண்டே செல்லலாம். ஒன்று, உடல் எடையை குறைக்க குடிநீர் பயன்படுகிறது. உடலிலுள்ள கொழுப்பு கரையும்போது ஏற்படும் சில துணைப் பொருட்களை வெளியேற்ற நீர் உதவுகிறது. கலோரி எதுவும் இல்லாத நீர் பசியை குறைத்து, அதிகமாக உணவு உடகொள்வதை தடுக்கிறது. இரண்டு, உடலுக்கு தேவைப்படும் நீர் குறைவால் ஏற்படும் தலைவலி மற்றும் முதுகுவலியிலிருந்து விடுபட குடிநீர் உதவுகிறது. தலைவலியை ஏற்படுத்த பிற காரணங்கள் இருந்தாலும், உடலிலுள்ள நீர் குறைவதால் ஏற்படும் தலைவலியே பொதுவானது. மூன்று, உடலின் தோலுக்கு தேவையான நீர் கிடைத்தால் முதுமை தோற்றமின்றி இளைய தோற்றம் ஏற்படும். தோலின் திசுக்களை மீண்டும் நிரப்புவதற்கும் தோலை ஈரமாக வைத்திருக்கவும், தோலின் நெகிழ்கின்ற தன்மை அதிகரிக்கவும் நீர் பயன்படுகிறது. நான்கு, மூளையில் பெருமளவில் நீர் உள்ளதால், போதுமான நீர் குடிப்பதால், நன்றாக சிந்திக்கவும், விழிப்போடு இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் குடிநீர் உதவுகிறது.

அறுசுவை சமையல் உலகம்